வட மத்திய மாகாணத்தில் நிலவி வரும் ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனம், இடமாற்றம், வெற்றிடங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியாக அறிவுறுத்தினார்.
2026 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்வி சீர்திருத்த திட்டம் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் நிகழ்வு வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர், கல்வித் துறையின் செயல் திறனை மேம்படுத்த வேண்டுமானால் ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்கள் முறையாகவும், நேர்மையாகவும் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அதேசமயம் இது தொடர்பில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்ஹ பேசுகையில்,
வட மத்திய மாகாணத்தில் சில பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அதிபர் தரங்களில் உள்ள 46 பேர் மேலதிகமாக உள்ளனர். 16 பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். ஆனால் பாடசாலைகளில் இருந்து கூறுகிறார்கள் ‘ஆசிரியர்கள் இல்லை என்று’ இந்த நிலைமை விரைவில் மாற்றப்பட வேண்டும்.
சரியாக இடமாற்றங்களை மேற்கொண்டு, நேர்முக பரீட்சை நடத்தி முறையாக நியமனங்கள் பெறாத அதிகாரிகளுக்கு சரியான முறையில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டார்.









