மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி வருவதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாது பயபீதியில் அச்சத்துடன் இருப்பதாக மக்கள் கடும் விசம் தெரிவிக்கின்றனர்.
வந்தாறுமூலை பேக்வீதியில் நேற்று முன்தினம் (21) வீட்டைவிட்டு வெளியில் வந்த வயதான பெண் ஒருவர் மீது குரங்குகடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார். இவரின் காலில் பாரிய தசைபகுதி இல்லாமல் போயுள்ள நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 6 பெண்கள் குரங்குகடிக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் வீட்டின் கூரைகளை உடைத்து சேதமாகிவருவதுடன், மாமாரம், பலாமரம் போன்ற பயன்தரும் மரங்களின் பழங்கள் காய்களை பிடுங்கி அழித்து வருகின்றது.
அவ்வாறே அந்த பகுதியில் பயிரிடப்பட்ட மரக்கறிகளை பிடுங்கி அழித்து அட்டகாசம் செய்துவருவதுடன், வீட்டில் இருந்து வெளியே வரும் வயதான பெண்களை குறிவைத்து அவர்கள் மீது தாக்கி, அவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதையடுத்து, மக்கள் பயபீதியில் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கியதுடன், அச்சத்தில் உள்ளதாக கடும் விசனம் தெரிவித்தனர்.








