மட்டக்களப்பில் ‘சமூக மருந்தகங்களின் கையேடு’ எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. என். தேவநேசனின் தொகுப்பில் உருவான இந்நூல், சுகாதார அமைச்சின் உணவுக்கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாகப் பிரிவின் உணவு மருந்துகள் பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன் தலைமையில் கல்லடி தனியார் விடுதியில் வெளியிடப்பட்டது.
விழாவின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர். முரளீஸ்வரம் கலந்து கொண்டு நூலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டனர்.

மங்கள விளக்கேற்றம், இறை வணக்கம், ஆசீர்வாதம், தலைமையுரை, நயவுரை, நூல் அறிமுகவுரை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. நூலாசிரியர் மற்றும் அதிதிகள், அழைக்கப்பட்டிருந்த தொழிலதிபர்கள், மருந்தக உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு நூலின் முதன்மைப் பிரதிகளை வழங்கினர்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் பீ. பற்குணன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ. உதயகுமார், ஓய்வுநிலை வைத்தியர் ஆர். நவலோஜிதன், மட்டக்களப்பு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம். சுதாகரன் உள்ளிட்டோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
விழா நிறைவில், மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதனின் சிறந்த சேவையை பாராட்டி, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். நூலாசிரியரின் ஏற்புரை மற்றும் மகிழ்வுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.




















