போதைப்பொருள் தொடர்பான சில குற்றச்சாட்டுகளில், மேல் நீதிமன்றத்தின் ஊடாக பிணை பெறும் வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக வெளியிட்ட விசேட அறிக்கையில் உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமுக்கு மேல் இருக்கும் வழக்குகளில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே பிணை பெற வேண்டிய நிலை காணப்படுவதால், அதில் தாமதம் ஏற்படுவதாக கைதிகளின் உறவினர்கள் தொடர்ந்து முறையிட்டு வந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வருடமாக சிறைச்சாலைகளின் நிலைமைகளை ஆய்வு செய்தபோது, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகள் தாமதமாக கிடைப்பதே பிணை கிடைப்பதில் ஏற்பட்ட பிரதான சிக்கலாக அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 118 பணியிடங்கள் காலியாக இருந்ததால் அறிக்கைகள் தாமதமாகியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது சுமார் 70 புதிய பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக கூறினார். இதன் மூலம் மாதந்தோறும் 7,500 முதல் 9,000 வரை பகுப்பாய்வு அறிக்கைகளை வெளியிடும் திறன் உருவாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும், 10 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருள் வழக்குகளில் பிணை பெறுவதில் நிலவும் தாமதத்தை நீக்குவதற்காக தற்போதைய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் மூலம் சில போதைப்பொருள் வழக்குகளில் மேல் நீதிமன்றத்தின் ஊடாக பிணை பெறும் வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
தற்போதைய சூழலில் சிலர் சிறைக்குள் உள்ள கைதிகளைத் தூண்டி அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கைதிகளும் அவர்களது உறவினர்களும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சட்டத் திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப்பட்டு பிணை பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும் என உறுதியளித்தார்.








