மட்டக்களப்பு – இலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (18) இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விநாயகர் பூஜைகளுக்குப் பின்னர் கொடித்தம்பம் ஆலயத்திலிருந்து கொடிகள் கொண்டு வரப்பட்டு, ஆலயத்தின் உட்பகுதியில் பாரம்பரிய முறையிலே கொடியேற்றம் செய்யப்பட்டது. வள்ளித் தெய்வானை ஆலயத்திலும் சிறப்பு கொடியேற்றம் நடைபெற்றது.
இருபது நாட்கள் நடைபெறவுள்ள இந்த மஹோற்சவத்தின் போது, தினமும் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள், வெளிவீதி உலா மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஆலயத்தின் பூஜை முறைகள் கதிர்காம ஆலயத்தின் மரபுகளுக்கு ஒப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று நடைபெற்ற கொடியேற்றத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இவ்வருட மஹோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளது.


















