திருகோணமலை, அனுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபானக் கடை ஒன்றில் இடம்பெற்ற ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (18) குறித்த மதுபானக் கடைக்குள் நுழைந்த சந்தேக நபர்கள், T56 ரகத் துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை அச்சுறுத்தி, பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட திருகோணமலை பொலிஸார், சம்பவம் நடந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள், உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தற்காலிக தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்றும் கிளிபுஞ்சிமலைப் பகுதியில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 54 மற்றும் 61 வயதுடைய இந்தச் சந்தேக நபர்கள் ஹக்மனப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கடையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 11,500 ரூபாய் பணம், சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள், T56 ரகத் துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்கள் கொண்ட மேகசின் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








