காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில், சுமார் 100 மீற்றர் தூரம் வலதுபுறம் தொடங்கி பிரதான வீதிவரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த வடிகால் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, வீதியின் இடது பக்கமாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த பகுதியில் வீதியின் ஓரத்தில் வீடு ஒன்று கட்டப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். அரசியல் செல்வாக்கினால் வடிகால் பணிகள் மாற்றப்பட்டதாக சமூக செயற்பாட்டாளரும், கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளருமான ஏ.சி.எம். மீராஸாஹிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“முதலில் திட்டமிடப்பட்டபடி வலதுபுறத்தில் வடிகால் தொடர்ந்திருக்க வேண்டும். வீடு ஒன்று இருப்பதற்காக பணிகளை நிறுத்தி, வடிகாலை குறுக்கே திருப்பி இடதுபுறமாக மாற்றுவது தவறான செயல். இது ஒரு முறைகேடாகும்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், “அந்த வீடு அமைக்க முதலில் யார் அனுமதி வழங்கினர்? இது அரசியல் செல்வாக்குடன் நடக்கிறது என்றால், மக்களின் பிரச்சினைகள் எப்போது தீரும்? வீதி அதிகாரசபையும் நகரசபையும் பொறுப்பை ஒருவருக்கொருவர் தள்ளுகிறார்கள். ஆனால் மக்களுக்கு எந்தத் தீர்வும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.









