உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷ்யா நேற்று (28) நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 போ் உயிரிழந்துள்ளதோடு 10 போ் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்காவுடன் 90 பில்லியன் டொலா் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்த அடுத்த நாளில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இது கடந்த மாதம் கீவ் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் குறைந்தது 21 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து நடைபெறும் முதல் பெரிய தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதலில் குடியிருப்பு கட்டடங்கள், வைத்தியசாலை மற்றும் பாடசாலை உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் இதில் நகரம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்கள் சேதமடைந்ததாகவும் கீவ் மேயா் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தாா்.
இந்த தாக்குதல் காரணமாக, நேட்டோ உறுப்பு நாடானபோலந்து, தனது போா் விமானங்களை உக்ரைன் எல்லைக்கு அருகே நேற்றறு நிலைநிறுத்தியது.
அண்மையில், ரஷ்யாவின் ட்ரோன்கள் போலந்தில் விழுந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மற்றொரு நேட்டோ நாடான எஸ்தோனியாவின் வான்வெளிக்குள் ரஷ்யாவின் போா் விமானங்கள் நுழைந்தன. இதனால், உக்ரைனுக்கு அப்பால் போா் பரவக்கூடும் என்று பல நாடுகளும் கவலை கொண்டுள்ளன.








