மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 34 வயது நபர் நேற்று (03) காலை தடுப்புக் காவலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் (02) மாலை போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கட்டாஸ்பத்திரி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் இவரை துரத்திப் பிடித்த நிலையில், இவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 6.30 மணியளவில் அவரது சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, மன்னார் நீதிமன்ற பதில் நீதவான் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து நீதவான் பேசாலை பொலிஸ் நிலையத்துக்கும் சென்று சிறைக் கூடத்தைப் பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் தாய், தனது மகனை அடித்துக் கொன்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.








