நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள “சரஸவி மெதுர” மாணவர் விடுதியின் கீழ்தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமது சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு புறப்படலாம் என்றும், வானிலை காரணமாக வீடு திரும்ப முடியாத மாணவர்கள் ‘சரஸவி மெதுர’ விடுதியைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், விடுதி நிர்வாகத்திடம் அறிவித்துத் தங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அபாயம் நிலவும் தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக விடுதிகளுக்கு வருகை தந்தால், அவர்களைத் தங்கவைத்து தேவையான பதிவுகளைப் பேணுமாறும் விடுதி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு மாணவரும் விடுதிகளை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும், தற்போதைய நிலைமை சீராகும் வரை அனைத்து மாணவர்களும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்படுமாறும் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.








