வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயம் சமூகம் சார்ந்த பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருகிறது. ஆலய நிருவாக சபை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது.
இதில் பேத்தாழை விபுலானந்நா கல்லூரி மற்றும் பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டு பஞ்சபுராணம் ஓதுதல், சமய வினா விடை போட்டிகள் மற்றும் பஜனைகள் போன்ற நிகழ்வுகளில் பங்கு பெறுகின்றனர். இந்த நிகழ்வுகளின் மூலம் மாணவர்களின் திறமைகள் வளர்த்துக்கொள்ளப்பட்டு, அவர்கள் திறமைக்கு ஊக்கமளிக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அந்த அடைப்படையில் பேத்தாழை விபுலானந்நா கல்லூரி பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆலயத்தலைவர் திரு.கி.கெங்கேஸ்வரன் பேத்தாழை விபுலானந்நா கல்லூரியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா கெளரவிப்பு நிகழ்விற்கு ஆசிரியர்களுக்கான 48 நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்திருந்தார்.
மேலும் ஆலயத் தலைவர் தெரிவிக்கையில், சமயமும் சமூகமும் வளர வேண்டும் எனும் கருப்பொருளுக்கமைய எமது ஆலயமானது முழுமையாக வளர்ச்சியடைய இன்னும் குறுகிய காலமே உள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்ததன் பிற்பாடு ஆலயத்தில் சேரும் நிதிகள் இப்பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்த வேண்டும் எனவும் , எழுத்தறிவித்தவன் இறைவன் என ஆசிரியர்களை இறைவனுக்கு நிகராக பாராட்டியதோடு ஆலயத்தில் இருந்து மாணவச்செல்வங்களின் கல்வியை வளர்ப்போம் எனவும் இதற்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் எனவும் கூறி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறி நிறைவுசெய்தார்.


















