மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் ஏராளமான முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான, மலைப் பகுதிகளின் பாதைகள் மண்சரிவில் முழுவதுமாக முடங்கியுள்ளதால், அங்கு சிக்கியவர்களை மீட்பது கடும் சவாலானதாக மாறியுள்ளது.
இந்த நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றின் பாதிப்புகளில் இதுவரை 76 பேர் பலியானதாகவும், 27 பேர் மாயமானதாகவும், மெக்சிகோ அரசு நேற்று (ஒக். 20) அறிவித்துள்ளது.

இதுபற்றி, செய்தியாளர்களுடன் பேசிய மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதுடன், இணைப்பு வழிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு 10 பில்லியன் பெசோஸ் (இந்திய மதிப்பில் ரூ.4.8 ஆயிரம் கோடி) நிவாரண நிதியை அளிப்பதாகவும், ஜனாதிபதி ஷீன்பாம் அறிவித்துள்ளார்.
இந்தப் பேரிடரில், அதிகம் பாதிக்கப்பட்ட ஹிடால்கோ மற்றும் வெராக்ரூஸ் ஆகிய மாநிலங்களில், மெக்சிகோ பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 12,700 வீரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








