தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான மாவீரர் நாள், பிரான்ஸ் நாட்டில் நேற்று (நவம்பர் 27) உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் பாரிஸ் மற்றும் ஏனைய மாநிலங்களில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில், பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது வீரத்தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் சிறப்பம்சங்களாக, தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளான மாவீரர்களின் உருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.











பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களின் பிள்ளைகள், பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கண்ணீர் காணிக்கையோடு அஞ்சலி செலுத்தினர்.
துயிலும் இல்லப் பாடல் ஒலிக்கப்பட்டு, அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றதுடன், ஈழ போராட்டத்தை எடுத்துக்கூறும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் தாயக விடுதலை வேட்கையையும், மாவீரர்கள் மீதான மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு மிகுந்த எழுச்சியுடன் நடந்து முடிந்தது.
இதன் போது மட்டு மாவீரர்களின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








