அக்குரணை அருகே உள்ள ரம்புக் எல விலானகம கிராமத்தில் நேற்று (29.11.2025) நள்ளிரவு ஏற்பட்ட மண் சரிவில் சுமார் 50 வீடுகள் புதைந்தன. உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்கள் மண்ணின் அடியில் சிக்கியுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவு 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த மண் சரிவு, தொடர்ச்சியான கனமழையால் பிடிமானம் இழந்திருந்த மலையடி பகுதிகள் சரிந்து விழுந்ததாலேயே ஏற்பட்டது. வீடுகள் முழுமையாக மண்ணில் புதைந்து காணப்படுவதால், உள்ளே இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.
பாதைகள் சிதைந்ததால் கிராமம் பல மணித்தியாலங்கள் வெளியுலகத்துடன் தொடர்பிழந்தது.
இலங்கை இராணுவம் மற்றும் மீட்பு அணிகள் களமிறங்கிய நிலையில், இதுவரை சுமார் 10 பேரின் உடல்களை மட்டுமே மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மண்ணின் உயரம் அதிகமாக உள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன.
எஞ்சியவர்களை தேடும் பணிகள் இன்னும் தொடர்க்கின்றன.
ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக 3–4 பேர் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.
இதன்படி 150 முதல் 200 பேர் வரை இந்த பேரழிவில் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரம்புக் எல விலானகம, அக்குரணையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்கும்புர – அளவத்துகொட வீதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் என்பதுடன், 800 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியில், சுமார் 50 முஸ்லிம் குடும்பங்களே பேரழிவுக்கு உள்ளாகியுள்ளன.










