பாரம்பரிய வைத்தியர்களுக்கான ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சிச் செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் ஏற்பாட்டிலும் கொழும்பு சுதேச வைத்தியப்பிரிவின் தலைவர் பி.தயாநந்தன் தலைமையிலும் நடைபெற்று வரும் இச்செயலமர்வில், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாரம்பரிய வைத்தியர்களின்அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் அவர்களின் வைத்திய
முறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டுமென்பது தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
ஆரம்பநாள் செயலமர்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர்
வைத்தியக் கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் கலந்துகொண்டு, ‘பாரம்பரிய மருத்துவத்தின் வரலாறும் இன்றைய நிலையும்’ தொடர்பாக விளக்கமளித்தார். இதேவேளை, கல்முனைபிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான எம்.ஏ.நபீலினால் இன்றைய உணவு முறைகளும் அவற்றின் ஆரோக்கிய
செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.