மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாழைச்சேனை (கோரளைப்பற்று) பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் குறித்த பிரதேச சபையின் பாதீடு சமர்ப்பிப்பு அமர்வு, இன்று (22) சபைத் தவிசாளர் எஸ். சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாதீடு குறித்த விவாதத்தின் பின்னர், பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் பாதீடு நிறைவேற்றப்பட வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானித்தனர். அதன்படி நடைபெற்ற வாக்கெடுப்பில்,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 10
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் – 3
ஐக்கிய மக்கள் சக்தி – 3
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி – 1
என மொத்தம் 17 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 4 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததுடன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 4 பேர் நடுநிலை வகித்தனர்.
இதன்படி, 2026ம் ஆண்டுக்கான பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பாதீடு குறித்து கருத்துத் தெரிவித்த தவிசாளர் எஸ்.சுதாகரன்,
2026ம் ஆண்டிற்கான உத்தேச வரவாக ரூ. 29.83 கோடி எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், உத்தேச செலவீனமாக ரூ. 29.80 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஊழியர் சம்பளச் சுமைகள் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில், மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து வட்டாரங்களுக்கும் சமநிலையான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சுற்றுலா விடுதிகளின் வருமானங்களில் இருந்து 1% அறவீடு, பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் புதிய திட்டங்கள், மற்றும் வட்டார அபிவிருத்திக்காக ரூ. 11 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பாதீட்டுக்கு ஆதரவளித்த, எதிர்த்த மற்றும் நடுநிலை வகித்த அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்போம் என தவிசாளர் உறுதியளித்தார்.

















