மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சித்தாண்டி மாவடிவேம்பு-2 ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தின் மகர ஜோதிப் பெருவிழாவின் மண்டல பூர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை (26) திருவாபரணபெட்டி எடுத்து வருதல் நிகழ்வு இடம்பெற்றது.
சுவாமிக்கு ஆபரணங்களை அணியும் முகமாக ஆபரணங்களுக்கு விசேட பூசைகள் நடைபெற்று அவை பெட்டிக்குள் வைக்கப்பட்டு செங்கலடியிலிருந்து ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயம் வரை தலையில் சுமந்தபடி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக ஐயப்பன் பக்தர்களால் சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோசத்துடன் பக்தி பூர்வமாக எடுத்துவரப்பட்டது.
வரும் வழியில் மாவடிவேம்பு பத்திரகாளி அம்மனை தரிசித்து ஆலயத்தை சென்றடைந்தனர்.
ஆலயத்தில் தீபாரதனை காட்டப்பட்டு விசேட பூஜை நடைபெற்றது.
பூசை நிகழ்வுகள் யாவும் குருசுவாமியும் ஐயப்ப தேவஸ்தான ஆலயத்தின் தலைவரும் சிவ ஸ்ரீ கா .விஜயகுமார ஈசான சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.














