தற்போது நடைபெற்று வரும் ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான இலங்கையின் முதல் போட்டியின்போது அவருக்கு பின்பக்க தொடைப்பகுதியில் (ஹாம்ஸ்ட்ரிங்) காயம் ஏற்பட்டது. போட்டிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் காயம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாது என அணியின் மருத்துவ குழு அறிவித்துள்ளது.
ஹசரங்காவின் இழப்பு இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவர் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் முக்கிய பங்காற்றி வந்தார்.
இந்நிலையில், அவருக்குப் பதிலாக துஷான் ஹேமந்தா இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மாற்று வீரர் சேர்க்கை தொடர்பான தேவையான அனுமதி ஐசிசி நிகழ்வு தொழில்நுட்பக் குழுவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணி தனது அடுத்த போட்டிக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.








