2019 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியங்களை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், தகுதியான ஓய்வூதியதாரர்களுக்கான திருத்தப்பட்ட கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை 2026 ஜூலை 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, ஜூலை 10ஆம் திகதி இடம்பெற்ற ஓய்வூதியக் கொடுப்பனவு தினத்திற்குள், 192,641 ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை திருத்தப்பட்ட பலன்களைப் பெற்றுக்கொள்ளாத ஏனைய தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கான நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வூதியதாரர்களுக்கு விரைவானதும் தரமானதுமான சேவையை வழங்குவதற்காக திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு ஓய்வூதியதாரர்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








