நாட்டில் கடந்த ஒரு ஆண்டிற்குள் மொத்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் சுராஜ் பெரேரா கூறுகையில், குழந்தைகள் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் அடுத்த மூன்று ஆண்டுகள் வழங்குவதற்காக சுகாதார அமைச்சருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமானதாகும். இது உடனடி சிகிச்சையை வழங்குவதற்கும் சிகிச்சை வெற்றியை அதிகரிப்பதற்கும் உதவுகின்றது. குழந்தைகளில் நீடித்த அல்லது சாதாரணமற்ற அறிகுறிகள் காணப்பட்டால் தாமதமின்றி மருத்துவ ஆலோசனை பெறுமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், தேவையான அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடையூறு இல்லாத சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மூன்று ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டம், குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் உளவியல் மற்றும் பொருளாதார சுமைகளை குறைக்கும் என சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.








