மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலைத் தொடர்ந்து நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
போர் நிலைமையால் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வது கவனிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

இலங்கைக்கான பெட்ரோல் மற்றும் டீசல் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
தற்போது நாட்டில்
37 நாட்களுக்கு தேவையான பெட்ரோல்,
35 நாட்களுக்கு தேவையான டீசல்,
47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருள்
கையிருப்பில் உள்ளதாகவும், கூடுதல் கப்பல்கள் வராதிருந்தாலும் இந்த காலத்திற்கு தடையின்றி விநியோகம் செய்ய முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டும் சற்று பாதிப்பு இருக்கலாம் என்றாலும், அதற்கும் ஒரு மாதத்திற்கான கையிருப்பு உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என CPC தலைவர் வலியுறுத்தினார்.
அதேசமயம், தேவையற்ற அச்சம் காரணமாக மட்டக்களப்பில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன வரிசைகள் காணப்படுகின்றன. இருப்பினும், மாவட்டத்திற்கான வழமையான எரிபொருள் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








