“ஈரான் உயர் தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி” என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்ட நிலையில், அந்நாடு புதிய உயர் தலைவரை தேர்வு செய்யவுள்ள சூழலில், இத்தகைய எச்சரிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
“ஈரான் உயர் தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி. அவரது பெயர் என்னவாக இருந்தாலும், அவர் எங்கு பதுங்கியிருந்தாலும் அவரைத் தேடி அழிப்போம்.

இதற்காக, நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம். தற்போதைய ஈரான் ஆட்சி தன்னை மீள்கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை நசுக்குவோம். ஈரானிய மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எரிந்துவிட்டு புதிய ஆட்சியை அமைக்கும் சூழலை உருவாக்குவோம்.
இஸ்ரேல் பிரதமருக்கும், இஸ்ரேல் படைகளுக்கும், எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படியும், போரில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஹீப்ரூ மொழியில் பதிவிட்டுள்ளார்.








