போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்ஃபகாரி இன்று (25) பகிரங்கமாகக் கேலி செய்துள்ளார்.
ஈரானின் முப்படைகளின் கூட்டுத் தலைமையகமான ‘காதம் அல்-அன்பியா’ அமைப்பின் சார்பில் ஆற்றிய உரையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறுவதை அவர் முற்றாக மறுத்தார்.
“உங்கள் உள்முரண்பாடுகள் உங்களுக்குள்ளேயே பேரம் பேசும் அளவிற்குச் சென்றுவிட்டனவா?” என்று வினவிய அவர், அமெரிக்கா தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வதாகக் கிண்டல் செய்தார். மேலும், “எங்களைப் போன்றவர்களால் உங்களைப் போன்றவர்களுடன் ஒருபோதும் ஒத்துப்போக முடியாது; இப்போது மட்டுமல்ல, ஒருபோதும் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொள்ள மாட்டோம்” என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே அமெரிக்கா தன் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளதால், இனி அந்த நாட்டை நம்பிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்தது.
பாகிஸ்தான், இடைத்தரகர்கள் மூலம் வொஷிங்டன் முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டம் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்ட போதிலும், ஈரானின் இந்த கடுமையான பதில் அந்தத் திட்டத்தின் மீது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
போர் தொடங்கி நான்கு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய பணவீக்க அச்சங்களையும் தூண்டியுள்ளது.
அமெரிக்கா தனது மூலோபாய தோல்வியை ஒரு ‘ஒப்பந்தம்’ என்ற பெயரில் மறைக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட ஈரானிய இராணுவம், பேச்சுவார்த்தைகளில் தங்களுக்கு எவ்வித ஆர்வமும் இல்லை என்பதையே தற்போதைய பதில் மூலம் உணர்த்தியுள்ளது.








