மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டில் ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், அரசாங்கத்தின் தடையை மீறி இன்று (25.03.2026) ஹட்டன் பகுதியில் நடத்தப்பட்ட தனியார் மேலதிக வகுப்புகளை பொலிஸார் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஹட்டன் – ஹிஜிராபுர பகுதியில் போதிய வசதிகளற்ற ஓரிடத்தில், ஹட்டன் தமிழ் பாடசாலை ஒன்றின் இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதனையடுத்து, ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர் டபிள்யூ. ஆர். ஏ. டி. சுகததாச தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர்.
அங்கு வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு, தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் அரச உத்தரவு குறித்து விளக்கமளித்த பொலிஸ் ஆய்வாளர், இது ஒரு சட்டவிரோத செயற்பாடு என எச்சரிக்கை விடுத்தார். மேலும், வகுப்பில் கலந்துகொண்டிருந்த மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த நாட்களில் எவ்விதமான தனியார் மேலதிக வகுப்புகளையும் (Tuition Classes) நடத்துவதற்கு அரசாங்கம் முழுமையாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








