வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேராக பனையூர் வாருங்கள்; வேறெங்கும் செல்லாதீர்கள் என்று தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ஆம் திகதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் முதல் முறையாக திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் சீரடி சாய் பாபா கோயிலில் விஜய் நேற்று தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் 232 வேட்பாளர்களையும் விஜய் இன்று (30) சந்தித்துப் பேசியுள்ளார்.
“சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நேராக பனையூர் வாருங்கள், வேறெங்கும் செல்லாதீர்கள், உங்களுக்காக நான் காத்திருப்பேன். வெற்றி பெறும் வேட்பாளர்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது, பனையூருக்கு மட்டும் வர வேண்டும். இதுவரை நன்றாக பணியாற்றியுள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கையின்போது கவனம் தேவை. வேட்பாளர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுக்காக காத்திருங்கள், நாம் எல்லோரும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.








