விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மலையக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களது அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மே தினத்தில் வெளியிட்ட செய்தியிலே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். மலையக உருளைக்கிழங்கு உற்பத்தியானர்கள் அமைப்பு இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தி, உள்நாட்டு உருளைக்கிழங்கு உற்பத்திக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்தால், விவசாயப் பொருளாதாரம் வலுப்பெறும்.
தொழிலாளர்களுக்கு அதிகளவு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிகரிக்கும் உற்பத்திச் செலவு மலையக விவசாயத்தில் ஒரு தொழிலாளரைப் பராமரிக்க நாள் ஒன்றுக்கு 3,500 முதல் 5,000 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்ய 300 ரூபாய் செலவாகும் நிலையில், சந்தையில் அதனை 150 முதல் 200 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில தவறான முடிவுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
அரசாங்கம் முறையான திட்டங்களை வகுத்து விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மலையக உருளைக் கிழங்கு விவசாயிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.








