இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பகுதி தொடர்ந்து செயற்பட்டு வருவதால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அதன் தாக்கம் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், இடைக்கிடையாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குறைந்த அழுத்தத் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கடும் கொந்தளிப்புடன் காணப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








