கற்பிட்டி, ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் “விஜய” பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி, ஆலங்குடா கடற்பகுதியில் பயணித்திருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. அப்போது, படகில் இருந்த இரு சந்தேக நபர்களும், அந்தப் படகும், மேலும் இருபது பைகளில் பொதியிடப்பட்டிருந்த சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








