அம்பாறை மாவட்டத்தின் இரு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதமுனையைச் சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனைக்காக பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் மேலதிக ஆய்விற்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதேவேளை, சம்மாந்துறை மஜீட்புரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். மரண விசாரணைக்குப் பின்னர் அவரது சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








