மட்டக்களப்பு நகரில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், உணவகம் ஒன்றின் மீது பொது சுகாதார பரிசோதகர்களால் (PHI) தொடரப்பட்ட வழக்கில், குறித்த உணவகத்தின் முகாமையாளரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு நகரின் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள குறித்த உணவகத்தில், சம்பவ தினமான நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தயாரித்து வழங்கப்பட்ட உணவுகள் மனிதப் பாவனைக்கு உதவாதவை எனவும், அங்கு பழுதடைந்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவகத்தை அதிரடியாக முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், அங்கிருந்து பழுதடைந்த உணவுப் பொருட்கள் மற்றும் மனிதப் பாவனைக்கு ஒவ்வாத முறையில் தயாரிக்கப்பட்டிருந்த உணவுகளைக் கைப்பற்றியதுடன், உணவகத்தின் முகாமையாளரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உணவக முகாமையாளரை தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், குறித்த உணவகத்திற்கு எதிராக ஏற்கனவே 2 முன்குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பொது சுகாதார அதிகாரிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.








