பூரணை அரச விடுமுறை தினமான ஜூலை 29 ஆம் திகதி கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களுக்கான கட்டாயக் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்தின் சார்பில் கல்வி அதிகாரிகள் நியாயமற்ற தீர்மானங்களை எடுத்து வருவதாக குற்றம் சுமத்தினார்.
கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் இத்தகைய முடிவை எடுத்திருக்கக் கூடாது என்றும், அரச விடுமுறை நாளில் நிகழ்வை நடத்தும் அதிகாரிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில், இதில் பங்கேற்கும் அதிபர்களுக்கு எந்தவித மேலதிக கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்தக் கூட்டத்தை அரச விடுமுறை நாளில் நடத்தாமல், வழமையான வேலை நாளில் நடத்துவதே பொருத்தமானதாக இருக்கும் என ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
முன்னதாக, “தூய்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “தூய்மையான சமூகம்” என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த அனைத்து அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ. அந்தரகே சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, பூரணை தினமான ஜூலை 29 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கண்டி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








