மின்சார கட்டணம் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி
மின்சார சபையின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், மின்சார அலகு ஒன்றின் விற்பனை விலை அதன் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்டுள்ள அந்தக் கொள்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்பூக்கனை முதல் கலகெதர வரையிலான மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளை இன்று (29) மீள ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான நீடித்த தீர்வாக மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த ரம்பூக்கனை–கலகெதர பகுதி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் தற்போது 112.4 பில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதார அமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என கூறினார்.
அதேவேளை, இலங்கை வரலாற்றில் மிகவும் குறைந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை பதிவு செய்ய தற்போதைய அரசாங்கம் முடிந்துள்ளதாகவும், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் தேசிய வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்த முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.








