மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனை மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, விற்பனை நோக்கில் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்ற இருவரை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து மொத்தமாக 600 கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவரிடமிருந்து 50 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய சந்தேகநபர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 550 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








