ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் தொடர்பான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும், இவ்வாறான விசாரணைகளுக்கு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்பட வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை மீளக் கட்டியமைப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (13) கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஆரம்பம் முதலே குரல் கொடுத்தவர்களில் ரவூப் ஹக்கீமும் ஒருவராக இருந்ததாக ரொசன் அக்மீமன் சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் சில அரசியல் தரப்பினர் பதற்றமடைவது ஏன் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும், எந்தவித அரசியல் அழுத்தங்களோ போராட்டங்களோ இந்த விசாரணைகளை நிறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த கால அரசாங்கங்கள் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த அக்கறை காட்டவில்லை என்றும், தற்போது நடைபெறும் விசாரணைகள் மூலம் உண்மை வெளிவரும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறியும் வரை இந்த முயற்சிகள் கைவிடப்பட மாட்டாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன் வலியுறுத்தினார்.








