அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, விசாரணைகள் நடத்தப்படுவதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் விசாரணை என்ற பெயரில் பழிவாங்கல் அல்லது அநியாய நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (14.06.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் அவசியம் என்றாலும், அது சட்டத்தின் எல்லைக்குள் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்திருந்த போதிலும், இன்று அதே சட்டத்தை பயன்படுத்தி அரசியல் நோக்கங்களுக்காக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு உரிய காலத்தில் விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும், பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது ஆட்சிக்காலத்தில் 80 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்டு 41 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய சட்டமூலங்கள் மூலம் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு சில தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
நாட்டின் கடந்த காலத்தை விமர்சிப்பதை விடுத்து, தற்போதைய அரசாங்கம் நாட்டுக்காக என்ன செய்கிறது என்பதே முக்கியம் எனவும் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.








