யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி நேற்று முன்தினம் பயணிக்கவிருந்த பயணிகளிடையே நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு இந்திய பிரஜைகளிடம் இருந்து தலா 100 கிராம் அளவிலான தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையில், சந்தேகத்தின் பேரில் 26 பயணிகள் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளுக்காக அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்போது 6 பேரின் உடலினுள் தங்க கட்டிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த 6 பேரும் சுங்க அதிகாரிகளின் காவலில் எடுக்கப்பட்டதுடன், ஏனைய 20 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை திங்கட்கிழமை வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைதான 8 பேரில் இரண்டு இலங்கை பெண்களும் ஆறு இந்திய ஆண்களும் அடங்குகின்றனர்.








