அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், 2028-க்குள் உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் நோக்கில் இரண்டு முக்கிய உத்தரவுகளை கையெழுத்திட்டுள்ளார்.
இந்த திட்டம், அறிவியல் ஆராய்ச்சியை முன்னேற்றுவதோடு, அரசாங்க கணினி அமைப்புகளை எதிர்கால சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
வெள்ளை மாளிகை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகத்தின் இயக்குநர் மைக்கேல் கிராட்சியோஸ், “இந்த இலக்கு 2028க்குள் நிறைவேறும்” என்று தெரிவித்துள்ளார்.
குவாண்டம் கணினிகள், பாரம்பரிய சூப்பர் கணினிகளை விட மிக வேகமாக சிக்கலான பிரச்சினைகளை தீர்க்கும் திறன் கொண்டவை. ஆனால், அவை தற்போதைய encryption முறைகளை உடைக்கும் திறன் பெற்றதால், சைபர் பாதுகாப்புக்கு பெரிய சவாலாகும்.

ட்ரம்ப் கையெழுத்திட்ட உத்தரவுகளில் ஒன்று, 2030-31க்குள் அரசாங்க கணினி அமைப்புகளை “போஸ்ட்-குவாண்டம் கிரிப்டோகிராபி” முறைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறுகிறது.
மற்றொரு உத்தரவு, 2028க்குள் பெண்டகன் குவாண்டம் சென்சார்கள் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. இவை, GPS செயலிழக்கும் போர் சூழல்களில் விமானங்களுக்கு வழிகாட்ட உதவும். மேலும், செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்டால், நிலத்தடியில் நடைபெறும் சுரங்கம் அல்லது ஏவுகணை தளங்கள் போன்ற நடவடிக்கைகளை கண்டறியவும் பயன்படும்.
அமெரிக்க வாணிகத் துறை சமீபத்தில் 9 குவாண்டம் நிறுவனங்களில் 2 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளது. IBM உட்பட பல நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
இந்த நடவடிக்கைகள், சீனாவுடன் நடைபெறும் “குவாண்டம் போட்டியில்” அமெரிக்காவின் முன்னிலை நிலையை உறுதிப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகின்றன.








