வெனிசுலாவில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுவரும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான பேரிடர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (27) ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமும் வெனிசுலாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,360-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 243 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் இன்னும் காணாமல் போயுள்ளதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தலைநகர் கராகஸ் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், அதிகளவிலான பாதிப்புகள் லா குவைரா (La Guaira) பகுதியில் பதிவாகியுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு தற்காலிக மருத்துவ மையங்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன், வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை நிலநடுக்கத்திற்குப் பின்னர் இதுவரை 214 பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் மீட்புப் பணிகளுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுக்களும் வெனிசுலாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அத்துடன், இந்த பேரிடரால் நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








