ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்திற்கு அறிவிக்காமல் மற்றும் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (08) கைது செய்யப்பட்ட இவர், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து நேற்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், தனது பயணப் பொதிகளில் 271 கிராம் மற்றும் 480 மில்லிகிராம் எடையுடைய 12 தங்க மாலைகள், 10 காப்புகள் மற்றும் 2 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பின்னர் குறித்த தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








