காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 250 காளான் வளர்ப்பு பைகளைக் கொண்ட ஒரு காளான் வளர்ப்பு கூடத்தை மூன்று மாதங்களுக்கு காப்புறுதி செய்வதற்கான தவணைக் கட்டணம் சுமார் 2,025 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நோய்கள் அல்லது பூச்சித் தாக்குதல்களால் காளான் வளர்ப்புக்கு சேதம் ஏற்பட்டால், 22,500 ரூபாய் வரை காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் பயனைப் பெற முடியும் என்றும், பயிர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத இழப்புகளிலிருந்து பாதுகாப்பு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என்றும் சபை தெரிவித்துள்ளது.
காளான் வளர்ப்பை மேலும் பிரபலப்படுத்தி, விவசாயிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








