தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நேற்று (22) இந்த விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பெலவத்தை பகுதியில் அதிகளவு நாய்கள் வளர்க்கப்பட்டு, சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்ட வீடொன்றை பரிசோதித்த போது, உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகளுடன் துப்பாக்கியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த துப்பாக்கியை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, மற்றுமொரு வீட்டில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட நிலையில், அங்கு சோதனை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீட்டின் உரிமையாளர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மேலும், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் வளாகங்களை பராமரித்ததாக அடையாளம் காணப்பட்ட 13 பேருக்கு எதிராக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








