தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வுட்லர் வெளியிட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்ட அதிகாரியிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
ஆரம்ப விசாரணைகளில், குறித்த உப பொலிஸ் பரிசோதகர் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையாக இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
26 வயதுடைய சந்தேகநபர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.








