60 வயதைப் பூர்த்தி செய்து, நன்நடத்தை கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் ஆளணி வெற்றிடங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தில் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் ஏற்கனவே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பொலிஸ் திணைக்களத்தில் மனிதவள பற்றாக்குறை நிலவுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர், அந்தப் பற்றாக்குறையை படிப்படியாக நிவர்த்தி செய்வதற்கும், குறிப்பாக கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பணிச்சுமையைக் குறைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.








