காலி, பிட்டிகல பகுதியில் தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலில் படுகாயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார்.
பிட்டிகல, நியாகம, உடகங்வத்த பகுதியில் கடந்த முதலாம் திகதி இரவு இந்த அசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான காரியவசம மாஜுவான கமகே நுவன் சுரங்க டயாஸ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று குறித்த தம்பதியினர் நண்பரின் வீட்டிற்குச் சென்று விட்டு, இரவு சுமார் 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தமது வீட்டிற்குத் திரும்புவதற்காக தயாரானபோது, அவர்கள் மீது அசிட் வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த தம்பதியினர் முதலில் நியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கணவன் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது மனைவியான 41 வயதுடைய குமாரி எதித்சிங்க கொடித்துவக்கு, தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அசிட் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை இருவர் பொலிஸாரின் பாதுகாப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், தனிப்பட்ட பணத் தகராறு காரணமாக இந்த அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.








