சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 26 வயதான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பை நடத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில், செப்டெம்பர் 22 ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சி, அனோஜனின் விடுதலைக்காக கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர வழிமுறைகளையும் அவசரமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த சவூதி அரேபியாவுக்கான பிரதிநிதிகள் குழுவில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ K. கோடீஸ்வரனை கட்சியின் பிரதிநிதியாக தமிழரசுக் கட்சி நியமித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சிவராசா அனோஜனின் வழக்கு தொடர்பில் தமக்குத் தெரிந்துள்ள தகவல்களை விளக்கி, அவருக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து விடுதலை செய்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.
அதேவேளை, தமிழரசுக் கட்சியுடன் நெருக்கமாகச் செயற்படும் புலம்பெயர் அமைப்புகளும், தாங்கள் செயற்படும் நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை அணுகி, அனோஜனின் வழக்கில் இராஜதந்திர மற்றும் மனிதாபிமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திரத் தூதரகங்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடனான தொடர்புகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் அவசரமாகப் பரிசீலிக்க வேண்டிய மேலதிக இராஜதந்திர வழிமுறைகள் மற்றும் முன்மொழிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்க விரும்புவதாகவும், சவூதி அரேபிய அதிகாரிகளுடனான இலங்கையின் ஈடுபாடுகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய நட்பு நாடுகளின் உதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் பரிசீலிக்க வேண்டும் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்து வரும் தூதரக மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இணைந்து, ஒருங்கிணைந்த உயர்மட்ட இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து, அவர் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கான அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமது தெளிவான நோக்கம் என தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நோக்கத்தை அடைவதற்காக ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சு, இராஜதந்திரப் பங்காளிகள், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் C V K சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M A சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.








