அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ததுடன், விலையை காட்சிப்படுத்தத் தவறிய ஹெட்டிபொல பகுதியிலுள்ள மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த மூன்று விற்பனை நிலையங்களுக்கும் தலா 25,000 ரூபாய் வீதம் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றை கொள்வனவு செய்வதற்கு முன்னர் அதன் விலையை முறையாக பரிசீலிக்குமாறும், நுகர்வோரிடம் அநியாயமாக பணம் அறவிடும் அல்லது பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.








