துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த குறித்த பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதனால் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக, துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில் பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன் பயனாக, இன்று முதல் குறித்த அரச பேருந்து சேவை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை நேரங்கள்:
- காலை 6.00 மணி – துணுக்காய்
- காலை 6.10 மணி – மல்லாவி
- காலை 7.00 மணி – மாங்குளம்
- காலை 7.10 மணி – மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி புறப்படும்
மேலும், முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு பேருந்து மீண்டும் துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை ஆரம்பிக்கும் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இந்த பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, துணுக்காய் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.








