மட்டக்களப்பு மக்களுடன் இணைந்து புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவேன் – சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன், நாடு முழுவதும் நாமல் ராஜபக்ஷவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதாகவும், அவரது தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு மக்கள் தம்முடன் கைகோர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிலையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷவுடன் இணைந்து பெற்றுக்கொண்ட இந்தப் பொறுப்பை அதிகாரமாக கருதாமல், மக்களுக்கான பொறுப்பாகவே கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து இன, மத மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதுடன், இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் ஊடாக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல், கல்வி, அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகள், ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை கேட்டறிந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருவதால், ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை விட நீதிமன்றமே குற்றவாளிகள் யார் என்பதை தீர்மானிக்கும் எனவும் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் தெரிவித்தார்.







