லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மா ஓயா, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் பலத்த காயங்களுடன் வீழ்ந்து கிடந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான மருமகன் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் லக்கல பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.








