கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த முதலாம் ஆண்டு தமிழ் மொழிப் பாடப்புத்தகங்கள் மற்றும் செயற்பாட்டுப் புத்தகங்களை பழைய காகித வியாபாரியிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சாரதி ஒருவர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கான புத்தகங்களை விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த குறித்த சாரதி, சுமார் 1,600 கிலோகிராம் எடையுடைய 19,892 புத்தகங்களை விநியோகிக்காமல் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு வழங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் அவர் 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், குறித்த புத்தகங்களின் மொத்த மதிப்பு சுமார் 8 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 விநியோக நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய புத்தகங்கள் கிடைக்காதது தொடர்பாக இசுருபாய கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவு அதிகாரியினால் கடந்த 12ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனையடுத்து சந்தேக நபர் தொம்பே, குடமாபிடிகம பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








